Thursday, February 23, 2012

தாயார் சன்னதி - நல்லா இருக்கு


 'நாளைக்கு செமஸ்டர் எக்ஸாம்க்கு படிக்க ராத்திரி எங்க வீட்டுக்கு
 வந்துருங்க'னு நா சொன்னேன். 'சரி நைட்டுக்கு ப்ரோட்டா வாங்கிட்டு
வந்துற்றேன்'னு விஜய் சொன்னான். நைட் எட்டு மணிக்குலாம் விஜய், அமிதாப்,
ராம்குமார்,  சுப்பிரமணி எல்லாரும் வந்துட்டாங்க. பரோட்டால சால்னா ஊத்தி
சாப்ட்டுட்டு படிக்க ஆரம்பிச்சோம். ரொம்ப நேரம் மொக்கை கொஞ்ச நேரம்
படிப்புன்னு மணி கிட்டத்தட்ட ரெண்டு ஆயுடுச்சு. மீதி இருந்த சால்னா வேற
மனச உறுத்திக்கிட்டே இருந்துச்சு. 'எல செந்தில் எனக்கு பசிக்குற மாறி
இருக்கு'னு சொன்னான் அமிதாப். 'ஒனக்கு பசிக்குதுனா குக்கர்ல சோறு வச்சு
சால்னாவ ஊத்தி சாப்ட்றலாம்'னு சொன்னேன். அப்போ என்னோட அம்மாவும்
அப்பாவும் வேற ரூம்ல தூங்கிட்டு இருந்தாங்க. குக்கர்ல சோறு வச்சோம்.
பக்கத்துல இருந்து விசில் வந்த ஒடனே கண்ணும் கருத்துமா காஸ ஆப்
பண்ணிட்டேன். சாப்பாடுல இருந்த ஆர்வத்துல ப்ரஷர் முழுசா எறங்குறதுக்கு
முன்னாடியே குக்கர தொறந்துடேன். மூடி பறந்துபோய் கீழ விழுந்துச்சு.
சத்தத்துல அம்மா வந்து பாத்தாங்க. இந்த பயலுக்கு எவ்ளோ தின்னாலும்
பத்தாதுன்னு நெனச்சுட்டு போய் படுத்துட்டாங்க.



 "விஞ்சை விலாஸின் சுவை" - "தாயார் சன்னதி" என்னும் புத்தகத்திலே இந்த
தலைப்பிலான அத்தியாயத்தைப் படிக்கும் போது எனக்கு மேற் கூறிய சம்பவம்தான்
ஞாபகம் வந்தது.

"அவனை விட சத்தமாக மனதுக்குள் சத்தம் போட்டேன்" - ரோட்டில் யாராவது நம்மை
 திட்டும்போது, நமக்கு தெரிய கடைக்காரன் நம்மை ஏமாத்தும் போது - இப்படி
பல சமயங்களில் நாம் நமக்குள்ளேயே கோபப்பட்டு செய்வதை ஆசிரியர்
செய்திருக்கிறார் என்று தெரிந்த உடன் மனதுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத
சந்தோஷம்.
 "என் மனைவிக்கு 5 மொழிகள் ந்ன்றாகத் தெரியும். தனக்கு தெரிந்த எல்லா
பாஷைகளிலும் என்னை சாரமாரியாக அவர்கள் தாக்கும் போதெல்லாம் எல்லா
கணவர்களுக்குமான பொது மொழியாகிய மௌனமொழியில் பதிலடி கொடுப்பேன். நிலை
குலைந்து போவார்" - திருமணம் முடிந்து சில வருடங்களான பல பேர் இதைச்
செய்து நாம் பார்த்திருப்போம்

 இப்படி ஒவ்வொரு தலைப்பை படிக்கும் போதும் நம் மனதில் பல நினைவுகள் வந்து
வந்து செல்கின்றன.  நெல்லைத்தமிழில் எதார்த்தமாக இருக்கிற இந்த புத்தகம்,
மனதை மென்மையாக வருடுகிறது. அநேகமான நெல்லை மக்களுக்கு இந்தப் புத்தக்கம் உறுதியாக பிடிக்கும்.

No comments: